Thursday, December 5, 2013

திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி கல்விச்சங்கம் நடத்தும் மகாகவி பாரதியார் தமிழ்இசை விழா



நிகழிடம்: மகாகவி பாரதியார் பயின்ற வகுப்பறை 
நாள்:7.12.13 காலை:9 மணி
வரவேற்புரை:திரு.மு.செல்லையா M.A,செயலாளர்,கல்விச்சங்கம்

தலைமை:திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் B.Sc.B.L,தலைவர், கல்விச்சங்கம்

வாழ்த்துரை: திரு.தளவாய் .தீ.ராமசாமி,பொருளாளர், கல்விச்சங்கம்

            திரு.பி.டி.சிதம்பரம்,ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்

            திரு.ரா.சுரேஷ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்


சிறப்புவிருந்தினர்:திரு.இசைக்கவி ரமணன்,இசைக்கவிப்பொழிஞர்,சென்னை
                மகாகவி பாரதியாரின்  கவிதைகளுடன் இசையுரை

நல்லதோர் வீணையில் மகாகவி பாரதிக்கு இசையஞ்சலி :                திரு.பரத்வாஜ் ராமன்,பிரபல வீணைக்கலைஞர் திரு.வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்களின் வழிதோன்றல் 

“மகாபாரதி எனும் யுகக்கவிஞன்” சிறப்புரை:

பேராசிரியர் ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி


நன்றியுரை:           திரு.சு.அழகியசுந்தரம் M.Com.,M.Ed,தலைமையாசிரியர்

            

Sunday, November 24, 2013

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் குறித்த சொற்பொழிவு ............. முனைவர் ச.மகாதேவன்










மேலப்பாளையம்,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் மகான் பஷீர் அப்பா தமிழ்இலக்கிய மன்றம் 11.11.13 அன்று காலை 10.30 மணியளவில் நடத்தும் தேசிய கல்வி நாள் விழாவில் “சமூக ஒற்றுமையில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பங்கு’’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினேன் .

’தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ’’ என்ற பாரதியின் வரிகளில்தான் என்ன தாகம்?
 வேருக்கு நீர் வார்த்தவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாய் மறந்து கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தப் பள்ளியில் இருந்து திரு.டி.எஸ்.எம்.ஓ.அசன் அவர்களின் அன்பு வேண்டுகோள் வந்தது.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் சமூக நல்லிணக்கத்தை தலைப்பாகக் கொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் என வேண்டினார்.

விடுமுறையில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் எழுதி அவரது மறைவுக்குப்பின் முப்பது ஆண்டுகள் கழித்து வெளியான ‘’இந்திய விடுதலை வெற்றி’’ என்ற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தியா சுதந்திரம் அடையக்கூடிய நிலையில் நாற்பதுகளில் நடந்த நிகழ்வுகளின் சரித்திர ஆவணம் அந்த நூல் ஒரு வரலாறு எவ்வாறு பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்கு அந்த நூல் ஓர் சான்று.
ஹிமாயூன் கபீர் மௌலானாவுடன் உரையாடி எழுத்தாக்கப்பட்டு பலமுறை ஆசாத் அவர்களே வரிக்குவரி வாசித்து செம்மையாக்கம் செய்த நூல்.


அல்ஹிலால் உருது இதழைத் தொடங்கி சுதந்திர உணர்வை ஊட்டிய மௌலானா வாழ்நாளின் பெருபகுதியைச் சிறைச்சாலையில் கழித்தார்.

அவர் துணைவியார் இறந்தபோது கூட ஆங்கிலஅரசு அவரை வெளியே விடவில்லை. ஒரு மணிநேரம் மிகவிரிவாகப்பேசினேன்

.சில மாணவியர் கண்கலங்கினர்.பேசிமுடித்த பின்னும் மனம்கனமாக இருந்தது.

Monday, November 4, 2013

வாரணம் ஆயிரம்..சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



இரண்டு மூன்று நாட்களாகவே யானை நினைவுகள் மனதின் ஓரத்தில் காலை ஆடிக்கொண்டிருக்கிறது.

பொட்டல்புதூர் யானையா?நெல்லையப்பர் கோவில் காந்திமதியா?சங்கரன்கோவில் குட்டியானை கோமதியா? தெரியவில்லை.

அதிகாலை நேரம் வாரிச்சுருட்டி எழுகிறேன்.

நீண்ட துதிக்கையுடன் பிரம்மாண்ட கருநிற அதிசயம்.

ஆட்டோ மட்டுமே நுழையும் எங்கள் குறுகியத்தெருவுக்குள் உடம்பைக்குறுக்கியபடி சிரமத்தோடு நுழைகிறது.
 

ஒவ்வொருவீட்டு வாசலிலும் துதிக்கையால் துளாவுகிறது.சில வீடுகளில் வாழைப்பழ வரவேற்பு,சில வீடுகளில் அரிசிவெல்லம் தந்து வரவேற்பு.

நன்கு முற்றிய கொப்பரைத்தேங்காயின் மூறிபோல் வெண்கலத்தில் செய்யப்பட்ட மணிகளின் ஓசை காதுகளில் வழிகிறது.

கத்திக்கூப்பாடு போடும் குழந்தைகளைத் தன்மீது அமரவைத்து அமைதியாக்குகிறது.சீர்தட்டிய குழந்தைகளைத் துதிக்கையில் வாளிநீரை வாரிமுகத்தில்வீசி முகத்தைத் தெளிவாக்குகிறது.


மெத்தனமாக யானை நடந்துசெல்வதைப் பார்க்க அந்தோனியார் பள்ளி விட்டவுடன் சமாதானபுரம் வரை உடன் நடந்துசென்றது இன்னும் நினைவில்இருக்கிறது. 


சமாதானபுரத்திலிருந்து பாளை.மார்க்கெட்டுக்கு, முக்குத்திரும்புமிடத்தில் மூங்கில்தட்டி செய்யும்இடத்தில் பெரிய மரத்தடியில் யானையோடு பலமணிநேரம் கழித்ததும் பள்ளிக்குப்போனவன் வீடுதிரும்பாததால் ஊர் முழுக்கத்தேடி கடைசியில் இரவு வீடு திரும்பும்போது வீடே ரணகளமாயிருந்ததும் இன்றும் பசுமரத்தாணிதான்.


யானை கிளம்பிவிட்டால் உடன் மாட்டுவண்டியும் வண்டி நிறைய தென்னங்கீற்றும் செல்வதைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்த நாட்களவை.

மாவுத்தன் யானைமொழியில்  ஏதோ ஒரு ஆணையைச் சொல்ல அந்த யானையும் அவன் சொன்னபடி ஆடுவது இன்னும் ஆவலைத்தூண்டும்.


குருசாமிஅய்யா யானையின் வெவ்வேறு பெயர்களை வகுப்பில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது.. . யானை,  வேழம், களிறு, பிடி, கலபம்,  மாதங்கம்,  கைமா,உம்பல், வாரணம், அஞ்சனாவதி, அத்தி,  அத்தினி, அரசுவா,  அல்லியன்,  அனுபமை, ஆம்பல்,  ஆனை,  இபம், இரதி, குஞ்சரம், இருள்,  தும்பு,  வல் விலங்கு, கரி,என்று அய்யா வரிசையாய் சொன்ன பேர்கள் மனம் பதிவு செய்துவைத்திருக்கிறது.
 


விலங்குகளிலேயே அதிக மதிநுட்பம் வாய்ந்தது யானைதான்.

திரும்பமுடியாத குறுகலான தெருகளில்கூட உட்சென்று பின்னோக்கிநடந்து வெளியே வரும் யானையின் ஆற்றலை எங்கள் தெருவில் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

செண்பகத்தக்கா தந்த வாளித்தண்ணீரை லாவகமாகத் துதிக்கையால் உறுஞ்சி சீர்தட்டிய அக்காவின் ஒருவயது பிச்சுக்குட்டி முகத்தில் சல்லென்று அந்த ஆம்பல் அதிசயம் வீசியதும் அதிர்ச்சியில் அவன் விக்கித்துப்போனதும் மறக்கஇயலா நினைவலைகள்.


யானை லத்தியை மிதித்தால் காலில் முள்குத்தாதென்று கிச்சாதாத்தா சொன்னதும்,நானும் எங்கள் பிச்சைஓதுவார் காம்பவுன்ட் பாலாவும் யானை லத்தியை மிதிமிதியென்று மிதித்து நெருஞ்சி முள்ளில் பாதம்பதித்து பதமானதும் சந்திக்கும்போது சொல்லிமகிழும் விடயங்கள்.


ஆனித்திருவிழா பார்க்கப்போய் சாரிப்பாட்டியோடு, அம்மன்சந்நிதி ஆறுமுகநயினார் சந்நிதியைத் தரிசித்து நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் இளம்பிறைமணிமாறன் அம்மாவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நெல்லையப்பர்கோவில் யானை காந்திமதிக்கு வார்ப்பில் சோறு சமைத்து பெரியபெரிய கவளமாய் மாவுத்தன் உருட்டிஉள்ளே வைக்க ரசனையோடு காந்திமதி அதைச் சாப்பிட்டதும் அந்த இரவு நேரத்தை மேலும் செறிவாக்கியது.


யானை எப்போதும் இப்போதும் நகரும் அதிசயம்தான்.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
.




Sunday, November 3, 2013

நெல்லையில் ஒரு நிகழ்வு மேலும் அமைப்பின் இலக்கிய விழா ..............அசின் சார், கழுகுமலை.



நெல்லையில் ஒரு நிகழ்வு மார்ச் 29, புனித வெள்ளி.
மாலை 3 மணி.
தேவாலயத்தில் நடைபெறும் தியான நிகழ்வுக்கு என் மனைவி கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, நான் பேரா.சிவசு அவர்கள் நெல்லையில் நடத்தும், “பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்” நிகழ்வுக்குக் கிளம்பினேன்.
நெல்லை ஜானகிராம் ஹோட்டல் அரங்கம்.
சிவசு அவர்களின் மேலும் அமைப்புடன் பேராசிரியர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.
மாலை 5 மணி.
பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.
பேரா.இராமச்சந்திரன் தனஞ்செயனை வாழ்த்திப் பேச வந்தார்.
“1987-ல் நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கியவுடன் பேரா.லூர்து அவர்கள் துறைத் தலைவர் ஆனார். அப்போது தமிழ்த் துறைக்கும் அவர்தான் துறைத் தலைவர். ஓராண்டு காலம் இருதுறைகளுக்கும் தலைவராகப் பணியாற்றினார். அன்றிருந்தே பேரா.தனஞ்செயன் பணியாற்றி வருகிறார்.
நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் உருவானதற்கு பேரா.நா.வானமாமலைக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஆய்வுகளை அன்றவர் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேரா.லூர்து அவர்கள் தாம் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி வாங்க அவரிடம் சென்றார். அவருடைய உரையாடலால், அவரிடம் எடுத்த பயிற்சியால், நாட்டார் வழக்காற்றியல் புலம் சேசு சபை குருக்கள் துணையோடு தூய சவேரியார் கல்லூரியில் உருவானது. சிலர் இதை கொட்டடிக்கிற துறை என்பார்கள். ஆனால், இத்துறை வழக்காறுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதாக இருந்தது. மொழியியல், வழக்காற்றியல், மானிடவியல், பண்பாட்டியல், அமைப்பியல் போன்றவற்றைப் பாடமாக வைத்து சொல்லிக் கொடுத்தது.நெல்லையில் ஒரு நிகழ்வு பேரா.லூர்து அவர்கள் இத்துறைக்கென ஒரு நூலகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தார். ஒருவருக்கு ஏற்படும் சந்தேகத்தை மற்றொருவரிடம் கேட்டு விவாதித்து இருக்கிறோம். அப்போது எங்களிடையே முரண்பாடுகளும் உண்டு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தறிந்தோம். ஏனெனில், அமைப்பியலோ, மொழியியலோ அவ்வளவு எளிதானதல்ல.
அமெரிக்காவிலிருந்து போர்டு பவுண்டேசன் பண்ட் வந்தது. அதைத் தொடர்ந்து பாளை, கொடைக்கானல், திரிச்சூர் போன்ற இடங்களில் உலகளாவிய பட்டறைகள் நடத்தப்பட்டன. அதே போல பின்லாந்திலிருந்து இங்கு வந்து வகுப்பெடுத்து இருக்கிறார்கள். இக்கூட்டு செயல்பாடுகளுக்குப் பேரா.லூர்து அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
1996-ல் பேரா.லூர்து அவர்கள் விட்டுச் சென்றதை, பேரா.தனஞ்செயன் நம்பிக்கையோடு துறைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்திருக்கிறார். எப்போதும் படிப்பதும் எழுதுவதுமாக இருக்கும் இவர், 32 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். “குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்” என்ற நூலில் சுறாமுள் வழிபாட்டை ஆய்வு செய்துள்ளார். “நிகழ்த்துக் கலைஞர்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் நிகழ்த்துக் கலைஞர்களுக்குரிய பிரச்சனைகளை ஆய்வு செய்திருக்கிறார். அதிலுள்ள பூம் பூம் மாட்டுக்காரர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை ஏதென்ஸில் வாசித்தளித்துள்ளார். “ஆவணப் படங்களும் கோட்பாடுகளும்” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இவரின் பணி நிறைவுக்குப் பின், வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற பல்கலைக் கழகம் அழைத்துள்ளது இன்னுமோர் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.
தொடர்ந்து, கவிஞர் கல்யாண்ஜி கவிதை வாசிக்க வந்தார்.
நிகழ்ச்சி மிகச்சரியாக ஐந்து மணிக்குத் தொடங்கியதை திருநெல்வேலியில் எப்போதாவது நடக்கும் ஆச்சர்யமாக விளித்தவர், ‘மேலும்’ அமைப்பைப் பாராட்டினார்.நெல்லையில் ஒரு நிகழ்வு “தயவு செய்து எல்லோரும் ‘மேலும்’ என்ற சொல்லை உச்சரித்துப் பாருங்கள். எனக்கு முன் இருக்கிற சிறு குழந்தைக்கு மேலும் ஒரு பிஸ்கட் தேவைப்படலாம். என்னுடைய மனைவிக்கு மேலும் கொஞ்சம் தாமிரபரணித் தண்ணீர் வராதா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். என்னைப் போன்ற படைப்பாளிகள் மேலும் ஒரு கவிதை எழுதிவிட மாட்டோமா என்று நினைக்கலாம். இப்போது ‘மேலும்’ என்ற ஒற்றைச் சொல்லோடு இங்கு நிற்கிறேன்.
பேராசிரியர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடைவெளி உண்டு. அதைக் குறைப்பதில் சிவசு 51 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நான் அதிகம் வெளியில் செல்லாதவன், மேடைகளில் பேசாதவன். சிவசு, என்னை கை பிடித்து கூட்டிச் செல்கிறார். கைகளைப் பிடித்துச் செல்வது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
கவிதை வாசிப்பு நிகழ்வு மலையாளத்தில் உண்டு. கவிதையை எழுதியவரே வாசிப்பது திருநெல்வேலியில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். கவிஞர் சுகுமாரன் முன்னால் சற்று கூச்சத்தோடு என் கவிதைகளை வாசிக்கிறேன்.
மல்லிகை பூக்கும், மாம்பூ பூக்கும், தேக்கும் பூக்கும்.
“தேக்கும் பூக்கும்” அவ்வளவு தான் கவிதை.
பெருமாள் நகர் புறநகர்ப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது நெடிய தேக்கு மரங்களைப் பார்க்கிறேன். சுவர்களுக்கு வெளியே தேக்குச் சருகுகள் உதிர்ந்து கிடப்பதைக் காண்கிறேன். முதிர்ந்த தேக்கு இலைச் சருகுகளில் மழைத் துளி விழும் போது எழும் அதிர்வுகள்; தென்னை ஒற்றைக் கிடுகு ஆடும் போது வரும் ஓசை – இவற்றை என்னைப் போன்றவர்கள், சுகுமாரன் போன்றவர்கள் அடுத்த நாள் கவிதையாக எழுதி விடுகிறோம்.
‘தேக்கு’ உறுதிக்குச் சொல்கிறோம்.
“தேக்கும் பூக்கும்” இது இன்னும் நெறைய சொல்கிறது.” என்றவர் தொடர்ந்து அவருடைய கவிதைகளை வாசித்தார். அரங்கம் அமைதியாகக் கேட்டதைக் கண்டு பாராட்டினார்.
இலக்கியங்களின் போக்கு பற்றி கவிஞர் சுகுமாரன் பேசும்போது, “மலையாள இலக்கியத்தை வரலாற்று மாணவனைப் போல ஆய்வு செய்து கூறினார். நவீனத்துவம், பின் நவீனத்துவம், ரசனை சார்ந்தவை, பெண்ணியம் என்று பகுத்துப் பார்த்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புகளை மறுமலர்ச்சிக் காலகட்டமாகக் கூறினார். வைக்கம் முகமது பஷீர் தந்த புதுமை மாற எழுத்துக்களையும்; சக்கரியா தந்த புதுமையான நடையையும் குறிப்பிட்டவர், எண்பதுகளில் இருந்து மலையாள இலக்கியங்களில் நவீனத்துவம் வலுவிழந்தது” என்றார்.நெல்லையில் ஒரு நிகழ்வு மீடியாக்களில் உள்ளவர் என்பதால், அது குறித்து சிவசு வினவியதற்கு, “மீடியாக்கள் பற்றிய அடிப்படை அறிவு தமிழ் மீடியாக்களுக்கு இல்லை. மீடியா செயல்பட குறைந்த பட்ச சுதந்திரம் வேண்டும். அது மலையாளத்தில் இருக்கிறது, தமிழில் இல்லை” என்று பதிலுரைத்தார்.
தொடர்ந்து, பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரின் ஏற்புரையுடன் விழா சரியாக 8 மணிக்கு நிறைவுற்றது.
அக இருளகற்றும் பேராசிரியர்களோடும், சமூகத்திலுள்ள அவலங்களையும் அழகியலையும் சுட்டிக்காட்டும் படைப்பாளிகளோடும் எனது ‘புனித வெள்ளி’ முடிந்தது.
அரங்கத்தை விட்டு வெளிவரும் போது, படைப்பாளிகளின் ஏக்கமும் சிலுவைப் பாடுகளின் ஏக்கமும் ஒன்றெனப் பட்டது.
வீடு திரும்பிய போது இன்றைய தியான சிந்தனை நன்றாக இருந்தது என்றாள் என் மனைவி.
நானும் அதையே சொன்னேன்.

நன்றி:சொல்புதிது

Friday, November 1, 2013

கல் சொல்லும் சொல்.....முனைவர் ச.மகாதேவன்








     
கல் காலத்தைக் கடந்தும் சரித்திரம் சொல்லும் உறுதிச் சொல்லாக அமைகிறது.ஓலைச்சுவடி அழிந்துபோகும்,பட்டுத் துணியில் எழுதப்ப்பட்டவை அழிந்துபோகும்,சொற்கள் காற்றுமண்டலத்தில் கரைந்துபோகும்..ஆனால் கல்லில் பொதிந்துதரப்பட்ட வரலாறு காலம் கடந்தும் இன்றும் நின்று சரித்திரச் சுவடுகளாய் அமைகின்றன.

கற்பின்கனலி கண்ணகிக்கு சொல்லால் காவியம் படைக்க இளங்கோவடிகள் முடிவு செய்தபோது மாமன்னன் சேரன்செங்குட்டுவன் தமிழரைப் பழித்துப் பேசிய இமயமன்னர்கள் கனகனையும் விசயனையும் வென்று அவர்களின்தலைமீதேற்றிக் கல்லினைக் கொணர்ந்து கண்ணகிக்குக் கோவில் அமைத்தான் எனும் வரலாற்றைச் சிலப்பதிகாரம் நமக்குச்சொல்கிறது.

தமிழரின் வாழ்வு கல்சார்ந்த வாழ்வு.அம்மி மிதித்து தொடங்கும் இல்லறம்,கல்லால் செய்யப்பட்டு எண்ணெயிலும் நெல்லிலும் தண்ணீரிலும் பதப்படுத்தப்பட்டு திருகுடமுழுக்கு நிகழ்த்தப்பட்டு நவரத்தினக் கற்கள் சகிதம் மருந்து சார்த்தப்பட்டு வழிபாட்டுக்கு உரிய தெய்வமாகப் போற்றப்படும் சிறப்பினைப் பெறுவதும் கற்கள்தான்.மன்னனின் புகழை மூவாயிரம் ஆண்டுகள் கழித்தும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் கற்கள்தான்.சுமைதூக்கிவரும் தொழிலாளியின் பாரத்தைச் சுமைதாங்கிக் கல்லாக இறக்கிவைப்பதும் கற்கள்தான்.


கிருஷ்ணாபுரம் சிற்பமாக,மகாபலிபுரம் ரதமாக,முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில், ஈராயிரம் ஆண்டுச் செழுமைமிக்க வள்ளுவத்தின் புகழ்பாடும் 133 அடி திருவள்ளுவரின் சரித்திரம் பாடும் பேறு பெற்றவையும் கற்கள்தான்.நிழலே விழாத தஞ்சைப் பிரகதீசுவரர் திருக்கோவில் கோபுரம் மாமன்னன் ராஜராஜசோழனின் சரித்திரம் பேசும் சாட்சிதானே.


.நடுகற்கள்,சதிக்கற்கள்,தொப்பிக்கற்கள்,குடைக்கற்கள்,சுமைதாங்கிக் கற்கள்,கோழிக் கற்கள் என கற்கள் இன்னமும் சரித்திரம் பேசிகொண்டிருக்கின்றன. 


 தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு கிமு 1000 தொடக்கம் கிபி 200 வரையாகும் என்று வரையறுக்கப்படுகிறது.ஊலோகக் காலத்திற்கும் முற்பட்ட காலமாய் கருதப்படும் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களும் கல்லாயுதங்களே.



நடுகற்கள்
......................
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடப்படும் கற்களே நடுகற்கள். 

 “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும்” என்று சேரமான் பெருமாள் நாயனார் புராணத்தில் நடுகல் குறித்த பதிவு உள்ளது.அகநானூறு எனும் சங்க இலக்கியத்தில் வீரமரணம் அடைந்த வீரரின் படம்,பெயர் ஆகிய அடையாளங்களோடு நடுகல்நடப்பட்டு அதற்குப் பூவும் புகையும் இட்டு வணங்கினர்.நடுகற்களோடு மயில்பீலிகளைக் கட்டி அதற்குக் கள் படைத்தது வழிபட்டசெய்தியைப் புறநானூறு காட்டுகிறது.


நடுகல்லை வழிபட்டால் மழை கொட்டும் என்று மக்கள் நம்பினர்.


தமிழி எனும் தூயதமிழ் எழுத்துப்பதிவுடன் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட நடுகல் புலிமான்கொம்பையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

அந்த நடுகல்கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.திருநெல்வேலி மாவட்டம் பனைஊரில் கி.பி.15 ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால் கிராமத்தில் கி.பி.16 ஆம் நூற்றாண்டின் நடுகல் கண்டுபிடிக்கப் பட்டது.

குதிரையில் பயணிக்கும் போர்வீரன் இந்த வீரக்கல்லில் அழகாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளான்.இந்த வீரக்கல் பாளையம்கோட்டை அருங்காட்சியகத்தில் காக்கப்படுகிறது.


புலிக்குத்தான் நடுகல்
................................................
கானகத்தில் புலியைக் கொன்று வீரமரணம் அடைந்த வீரனுக்கு புலிக்குத்தான் நடுகல் தர்மபுரி மாவட்டத்தில் கடத்துஊர் காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

சதிக்கற்கள்
................................
கணவன் இறந்தவுடன் சுவர்க்கம் கிடைக்க வேண்டி மனைவியும் அவனுடன் உடன்கட்டை ஏறுவது பண்டைக்காலம் முதலே வழக்கத்தில் இருந்தது.

சில நடுகற்களில் போரில் இறந்த வீரனுக்கு இருபுறமும் இருபெண்கள் நிற்பதைப் போல் கல்பதிவுகள் இருக்கக் காண்கிறோம்

.அவர்கள் அவ்வீரனைச் சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும் ரம்பயர்கள் என்று அறிகிறோம்.கணவர் இறந்துவிட்டார் என்று அறிந்துடன் தன் உயிரை உடன் மாய்த்துக்கொள்ளும் பெண்கள் மாசதிக்கல் நடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியாவின் தொன்மையான மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த மாசதிக்கல் ஆந்திரமாநிலத்தின் நாகார்ஜுனகொண்டா எனும் இடத்தில் கிடைத்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி எனும் இடத்தில் கணவனின் சிதையோடு எரிந்துபோன பதினைந்தாம் நூற்றாண்டு சார்ந்த ஒரு பெண்ணின் மாசதிக்கல் கண்டுபிடிக்கப் பட்டு பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் காக்கப்பட்டுவருகிறது

.புறநானூறு எனும் சங்கஇலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்துபோக அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உயிர்நீத்த செய்தியை அறியமுடிகிறது.

கோழிக்கல்
.............................
மனிதர்களுக்கு மட்டுமன்றி சேவல்களுக்கும் வீரக்கற்கள் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது.

சேவல்சண்டை நடத்தப்பட்டு எதிர்த்துப் போரிட்ட சேவலைக் கிழித்து அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்த வீரச்சேவலைப் பாராட்டி வென்ற சேவலுக்குக் கோழிக்கல் வைக்கப்பட்டதைக் காணமுடிகிறது.

இரண்டுக்கு இரண்டு எனும் அளவில் செதுக்கப்பட்ட கல்லில் வீரப்போரில் வென்ற சேவல் படம் புடைப்புச் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்தளூர் எனும் ஊரில் சேவல் படம் பொறிக்கப்பட்டு அதன்கீழ் அதன் பெருமையும் வீரமும்  வட்டேழுத்தில் பொறிக்கப்பட்டு மரியாதை தரப்பட்டுள்ளது.

உருண்டை நடுகல்
...........................................
செவ்வக வடிவில் வழக்கமாக நடுகற்கள் அமைந்திருக்கும்.வீரமரணம் அடைந்த வீரனின் உருவமும் அவனுக்கு அருகில் கத்தி,வாள்,அம்பு போன்ற போர்க்கருவிகள் புடைச்சிற்பமாய் அமைக்கப்பட்டு அவன் புகழ் அதில் எழுத்து வடிவில் பொறிக்கப்படும்.


 

ஆனால் வழக்கத்திற்கு மாறாக தூத்துக்குடி மாவட்டம் இளவேலங்கால் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டு சார்ந்த நடுகல் உருண்டை வடிவில் காணப்படுகிறது.

இந்த வேறுபட்ட நடுகல் பாளை.அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 

சுமைதாங்கிக்கல்
.........................................
வயிற்றில் கருவோடு மரணம் அடைந்த கர்ப்பிணிப்பெண்ணின் பாரம்போக்க சுமைதாங்கிக் கல் வைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு.
 
வண்டிகள் அற்ற காலத்தில் தலைச்சுமையோடு பயணிக்கும் தொழிலாளர்கள் இந்தச் சுமைதாங்கிக் கற்கள் மீது தங்களின் தலைச்சுமையை இறக்கி வைப்பர்.

மனிதர்கள் தங்களின் பாரத்தை இறக்க வயிற்றில் பாரத்தோடு இறந்துபோன பெண் சுவர்க்கம் செல்வாள் என்ற நம்பிக்கை இன்னமும் கிராமத்தில் உள்ளது.


இளவட்டக்கல்
.....................................
உருண்டை வடிவத்தில் அமைந்த விளையாட்டுக் கல்.ஊரின் நடுப்பகுதியில் ஆலமரத்தடியில் கிடக்கும் இக்கல்லைத் தலைக்கு மேல் தூக்குபவருக்குப் பெண்ணின் தந்தையார் தம் மகளைத் திருமணம் முடித்துத்தருவார்.
 
திருநெல்வேலி மாவட்டத்தின் சொக்கட்டாம்தோப்பு எனும் கிராமத்தில் இன்றும் இளவட்டக்கல்லைப் பார்க்கலாம்.

கற்கள் வெறும் கற்கள் அன்று.
அவை கடந்தகாலத்தின் நிகழ்கால நிஜங்கள்.