Tuesday, October 29, 2013

மகாபாரதி இணையக்கவிதைகள்



இணையத்தின் இதயத்தில்...

காலம் மாற மாற மக்களிடம் கலையைக் கொண்டுசெல்லும் ஊடகமும் மாறுகிறது.

நீண்ட நெடுங்கதையைக் காப்பியங்களாகப் படைத்துக் கதைசொன்ன காப்பியகாலம் இனிய காப்பியங்களைத் தமிழுக்குக் தந்தது.நீதிநூல் காலத்தில் வெண்பாயாப்பில் வரிசையாய் நீதிஇலக்கியங்கள் தோன்றின.

இந்த நூற்றாண்டின் இனிய ஊடகமாக இணையஊடகம் வந்தபோது அச்சுநூல்கள் இணையஊடகத்தில் வெளிவரத்தொடங்கின.

கவிதைகளும்,கட்டுரைகளும் இணையம் மூலம் உலக வாசகர்களைப் பரவலாகச் சென்றடைந்தன.


மகாகவி பாரதியின் காட்சிகவிதையில் தோற்றம் கண்ட தமிழ்ப்புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி,கு.ப.ரா.,சி.மணி,தருமு சிவராம்,நகுலன்,ஞானக்கூத்தன்,வல்லிக்கண்ணன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் தொடக்கத்தில் கல்வியகங்களில் அனுமதிக்கப்படாத நிலையில் வானம்பாடி இயக்கம்,எழுத்து இயக்கம்,சரஸ்வதி இயக்கம் என்ற இயக்கங்கள் தமிழ்இதழ்களின் பெயரில் செயல்பாட்டு இயக்கமாய் தோன்றி புதுக்கவிதைக்குக் கல்விநிலையங்களில் மதிப்பினைப் பெற்றுத்தந்தன.


இந்த நூற்றாண்டு இணையஊடகத்தின் நூற்றாண்டு.


கல்யாண்ஜி,கலாப்ரியா,என்று புதுக்கவிதைப் படைப்பாளிகள் யாவரும் இணையதளயங்களில் இயங்குகிறவர்களாக தனக்கெனத் தனிவலைப்பூக்களை வடிவமைத்து கட்டற்ற அவ்வெளியில் இயங்குகிறவர்களாக உள்ள நிலையில்
எனும் வலைபூக்களை உருவாக்கிப் புதுக்கவிதைகளைத் தொடரந்து படைத்து வெளியிட்டு வந்தேன்

.முகநூலிலும் தொடந்து எழுதி வருகிறேன்.

ஒருங்குறியில் உள்ளிட்டதால் கனடா,அமெரிக்கா,இலங்கை,இந்தோனேசியா,ரசியா,அரபுநாடுகள்,தென்ஆப்ரிக்க நாடுகள் ஆகிய நாடுகளின் வாசகர்களை உடன் சென்றடைந்தது.

பின்னூட்டம் போன்ற வசதிகளால் உடன் கவிதைகுறித்த வாசகர்களின் கருத்துக்களை அறியமுடிந்தது.

அடுத்தடுத்து நான் எழுதிய கவிதைகளுக்கு அவை வழிகாட்டியாய் அமைந்தன.
மகாகவி பாரதி பெயரால் நான் தொடங்கிய மகாபாரதி வலைப்பூ ஆயிரக்கணக்கான உலகவாசகர்களை எனக்குப் பெற்றுத்தந்தது.


 நான் உருவாக்கிய  கவிதைகள் யாவும் இன்று கூகிள் தேடுபொறியால் உலக வாசகர்களைச் சென்றடைந்துள்ளன.புதுக்கவிதை இயக்கத்தை இன்று இணையம் முன்னெடுத்துச் செல்வது தமிழ் என்றும் இளமையான மொழி என்பதைக் காட்டுகிறது.

Sunday, October 27, 2013

சிறக்கட்டும் இணையத்தமிழ் ... முனைவர் ச.மகாதேவன்,திருநெல்வேலி




இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலாக அச்சுப்புத்தகம் வெளியிடப்பட்டது. 

 புனித சவேரியார் என்கிற புனிதரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவநூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் அண்டிறிக்கி என்பவர். கொல்லத்தில் அந்நூல் அச்சாக்கப்பட்டு  433 ஆண்டுகளாகின்றன.(20.10.1578)
(தமிழ்நாடன் எழுதிய 'தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' நூலிலிருந்து) 

அச்சுக்குப் போன முதல் மொழி நம் அன்னைத்தமிழ்மொழி. எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர், தங்கள் நாட்டில் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்.

ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன், வீரமா முனிவர், ): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்த ராபர்ட் கால்டுவெல், . தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டு . சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆலன் டேனியலு, தமிழ் ஆங்கில அகராதியினைத் தயாரித்து வெளியிட்ட ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ், 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்ட . ஹென்ரிக் ஹென்ரிக்ஸ், திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்ட ஜி.யூ.போப், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்ட பார்த்தலோமியோ சீகன் பால்கு என்று வரிசைவரிசையாய் தமிழ்பால் அன்பு கொண்டு மேலை நாட்டு அறிஞர்கள் தமிழ்இலக்கியங்களை உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற நிலையில் நாம் என்ன செய்தோம் என்ற வினாவின் வெளிப்பாடே இந்த இணைய முயற்சி.
 

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்திடும் நோக்கில் தமிழ்இணையத்தளங்களை உருவாக்கினேன்.

செம்மொழித்தமிழின் சிறப்புகளை உலகின் முன் கொண்டு செல்ல
எனும் தமிழ்இணையத்தளங்களை உருவாக்கினேன்.

தமிழின் கவிதைக்கென்று ஒரு தமிழ்வலைப்பூ,தமிழ்க்கட்டுரைகளுக்கென்று ஒரு வலைப்பூ என உருவாக்கினேன்.
தரமான தமிழ்க்கட்டுரைகளை அவ்வலைப்பூக்களில் வெளிஇட்டேன். 


சூஃபிய சித்தாந்தமும் சித்தர்களும் சித்தர்களும், திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள், வையகச் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும், உலகக் காப்பியங்களுக்கு நிகரான தமிழ்க்காப்பியங்கள், உலகத் தரத்திலமையும் தமிழ்ச் சிறுகதைகள், பாரதியின் மரபும் மரபு மாற்றமும், குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்திகள், கருணாமணாளனின் சிறுகதைகள் காட்டும் இஸ்லாமியர்களின் வாழ்வியல்“,தமிழ் இலக்கியம் உணர்த்தும் மண்ணும் மனித உறவுகளும், தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் மனிதநேயச் செய்திகளும் அன்னை தெரசாவின் வாழ்வியலும், ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள், புலரும் புதுயுகத் தமிழ், அழகியல் தளத்தில் அமையும் கல்யாண்ஜி கவிதைகள், எதிர்காலத் தமிழ் எவ்வாறு அமையும், வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள், சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு வரலாற்றுப் பார்வை, சங்க இலக்கியமரபில் கவிஞர் இளையபாரதியின் பட்டினப்பாலை, செம்புலப்பெயல் நீர் கவிதைகள் ஓர் ஆய்வு, சி. பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள், மூவர் தேவாரத்தில் இயற்கை, குறுந்தொகை காட்டும் மனித உறவுகள், நபிகள் நாயகம் (ஸல்) அன்பின் தாயகம். கலித் தொகையில் உளவியல் கூறுகள்
எனும் தலைப்புகளில் நான் தமிழ்இணையத்தளங்களில் எழுதிய கட்டுரைகள் உலகநாடுகளின் தமிழ்அறிஞர்களின் பார்வைக்குள்ளானது.

எனும் வலைப்பூவில் நான் மகாகவி பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு எழுதிய ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள் எனும் கட்டுரையைக் கனடாவிலிருந்து வெளியாகும்
www.geotamil.com எனும்  தமிழ்இலக்கியஇணையத்தளம் மீள்பிரசுரம் செய்துவெளியிட்டது.

செம்மொழித்தமிழ் டாட் காம் எனும் என் இலக்கியஇணையத்தளத்தில் இதுவரை 5000 உலகத்தமிழர்கள் பார்வையிட்டுள்ளனர்.


தேமதுரத்தமிழோசை உலமெலாம் பரவ இந்தஇணைய முயற்சிகளும் துணைபுரியட்டும்.

முனைவர் ச.மகாதேவன்

Saturday, October 26, 2013

பொன்னமராவதி எனும் பொன்னான பூமி


நினைவுகள் சுகமானவை நடப்புநிகழ்வுகளில் இருந்து தப்பிக்க உதவும் தற்காலிகச் சொர்க்கம் என்றுகூடச் சொல்லமுடியும்.
 
பேருந்துப் பயணங்கள் கூடச் சிலநேரங்களில் நினைவுகளின் தொட்டிலாக அமைந்துவிடும்
 
.தாயாரின் ஆதிமண் பொன்னமராவதி.முப்பத்துமூன்று ஆண்டு நினைவுப் பதியன்கள் போட்ட இடம்.
 
மதுரையிலிருந்து சிங்கம்புணரி சென்று ஆ.தெக்கூர் கடந்து சிதம்பரம் ரோடுவேஸ் நெற்குப்பை தாண்டியஉடன் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
 
"அழகுநாச்சியம்மன் பொன்னமராவதி"
.....................................................................................

ஊருணி பெருவட்டமாய் நிரம்பி வழியும்.பரியாமருதுபட்டி பச்சை வயல்களும்,அரண்மனை போன்ற செட்டிநாட்டு வீடுகளும்,நல்லதண்ணீர் எடுக்கும் சேங்கைகளும்,ஆலமரத்தடியும் கிராமம் காக்கும் அழகுநாச்சியம்மன் திருக்கோவிலும் கருப்பரும் வாசலில் நிற்கும் பிரமாண்டமான குதிரைகளும் ,அமரகண்டான் ஊருணியும்,பட்டமரத்தான் கோவிலும் சாரைசாரையாய் அகக்கண்முன் ஒளித்துகள்களாய் வந்து மோதிச்செல்லும்.
"அழகுநாச்சியம்மன் பொன்னமராவதி"
........................................................................................
 
முழுப்பரீட்சை லீவுக்கு வரும் தன் பேரன்பேத்திகளை வரவேற்கப் பரபரப்பாய் பஸ்ஸ்டாண்டில் காமாட்சிப்பாட்டி காலையிலிருந்தே காத்துக்கிடப்பாள்.
 
பாட்டி வீடு மலையான் ஊருணிக்கருகில் கல்செக்கு ஓடும் சிதம்பரம்செட்டியார் சந்தில் இருக்கும்.
 
குடிசைவீடு,மண்தரை மின்விளக்கு கிடையாது.
 
வாசலில் கிடக்கும் கல்பெஞ்சில் அமர்ந்தபடி நிலாவெளிச்சத்தில் பாட்டி எங்களோடு பேசுவதே 
 
தனிஅழகு.நாட்டுமருந்துக் கடைக்கு போய் நறுக்குமூலம் வாங்கி ஊருக்கு பயணித்த அலுப்புதீர ரசம் வைத்து ஆனந்தக்கண்ணீருடன் தையல்இலையில் உணவு பரிமாறுவாள்.காலைப்பொழுது வந்துவிட்டால் கேணிக்கருகில் அழைத்துச் சென்று தண்ணீர் சேந்தி ஊற்றிவிட்டு வேப்பஇலை மார்கோ சோப்புபோட்டுத் தேய்த்து விடுவாள்
 
.செவ்வாயும்,சனியும் வாரச்சந்தை.நுங்கும்,நீர்மோரும் வயிருமுட்டத் தருவாள்
 
.பாட்டி அரிக்கேன் விளக்கின் காண்ணாடியை விபூதி போட்டு பழைய துணியால் துடைத்துப் பளிச்சென்று ஆக்கிஎரிய வைப்பாள்.நாட்டுக்கல் அருகிலுள்ள வாசகசாலைதான் எங்களின் ஒரே பொழுதுபோக்கு
 
.கோகுலம்,அம்புலிமாமா,காமிக்ஸ் கதைகள் படிக்கத் தொடங்கியது 
 
அங்கேதான்,எப்போதும் நீர்அலைமோதும் அழகான அமரகண்டான் ஊருணிக்கருகில் வாசகசாலை என்பதும்,எந்த நூலையும் உடனே எடுத்துத்தரும் லைப்ரேரியன் மலையாண்டி அய்யா இருந்ததும் நிறைய வாசிக்கத் தூண்டின.
 
 லைப்ரேரி விட்டு வெளியே வந்தஉடன் அழைத்துச் செல்லப்பாட்டி வந்திருப்பாள்
 
.வரும்வழியில் கலர்கலர்க் கண்ணாடிகள் பூட்டிய பலகாரவண்டியில் அல்வாவும் சோமாசியும் வாங்கித்தருவாள்.நிறையக்கதை சொல்வாள்.















இன்னும் ....
சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

Friday, October 25, 2013

தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் “மனிதநேயச் செய்திகளும் அன்னை தெரசாவின் வாழ்வியலும்





பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

முன்னுரை
      “பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சேவை செய்யும் கரங்கள் உன்னதமானவை“ எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் அன்னை தெசரா.  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட அப்புனிதத்தாய் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும், நோயாளிகளுக்கும் உதவுவதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று சகோதரத்துவம் பேசிவரும் தமிழ் இலக்கியங்கள் தொன்று தொட்டு மனித நேயத்தையே வலியுறுத்துகின்றன.  அம்மனிதநேயத்தையே தன் வாழ்வியல் இயக்கமாகக் கொண்டு வாழ்ந்த அன்னை தெரசாவின் மனிதநேய வாழ்வியல் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
பிறருக்கு உதவுவதே வாழ்வின் நோக்கம்
      “ஒருவன் உலகத்தையே ஆதாயமாக்கிக் கொண்டாலும் ஆத்மாவை இழந்தால் என்ன பயன்?“1  என்ற இயேசுநாதரின் வினா, வாழ்வின் நோக்கத்தைப் புரிய வைக்கிறது.  அனைவரும் இறைவனின் மக்கள் என்ற நிலையில் ஒருவர் மற்றவருக்கு உதவுதலும், தொண்டாற்றுவதும் அவசியமாகிறது.
       “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்“2 என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கேற்பச் சமத்துவ சமுதாயம் அமைக்க அன்னைதெரசா உறுதி பூண்டார்.  நிகோலஸ் பொஞ்சாஸ்க்யூவின் மகளாகக் கோன்ஸா என்ற பெயரில் யூகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி நகரின் தோன்றிய அன்னை தெரசா பன்னிரண்டாம் வயதில் சமூக சேவையைத் தொடங்கினார்.
      “தனக்கென வாழ்பவன் இருந்துமே இறக்கிறான்! பிறர்க்கென வாழ்பவன் இறந்தாலும் இருக்கிறான்“ என்ற வரிகளுக்கேற்ப மறைந்த பின்னரும் புனிதராய் அவர் வாழக் காரணம் அவருடைய மாசுமருவற்ற தொண்டுள்ளம்தான்.  பதினெட்டு வயதில் கோன்ஸா உறுதியான முடிவெடுத்து “சிஸ்டர்ஸ் ஆஃப் லொரெட்ரோ“ எனும் கிறித்துவசபையில் சேர்ந்து ஆக்னஸாக மாறினார்.  இந்தியாவுக்குச் சென்று ஏழைமக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தனியாத ஆர்வம் கொண்ட சகோதரி ஆக்னஸ் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு 1929ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.  கால்பதித்த முதலிடம் பம்பாய் துறைமுகம்.  அங்கிருந்து தொடர் வண்டியில் கிளம்பி கல்கத்தா வந்தார்.
மணிமேகலையும் மனிதநேய மேகலையும்
      திருமணம் முடிக்க வேண்டிய இளம்வயதில் புத்த சமயத் துறவியாக முழுமையாய்மாறி உன்னதமான துறவுவாழ்வை மேற்கொண்டவர் மணிமேகலை.  அன்னை தெரசாவும் பதினெட்டு வயதில் லொரோட்டோ அருட்சகோதரிகள் அமைப்பில் சேர்ந்து ஏழைகளுக்காவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டவர்.  கல்கத்தா வந்திறங்கிய உடன் கத்தோலிக்க சபை அன்னையின் பெயரை மாற்றப்பணித்தது.  காச நோயாளிகளைக் காக்கத் தன் வாழ்வையே பணயம் வைத்து 24ஆம் வயதில் அக்காசநோயுக்குப் பலியாகிப் போன பிரான்ஸ் நாட்டு அருட்சகோதரி தெரசா மார்ட்டின் பெயரைத் தன் பெயராக அந்த அருட்சகோதரி வைத்துக் கொண்டு கல்கத்தா நகரில் தொண்டாற்றத் தொடங்கினார்.
      பாத்திரம் பெற்ற காதையில் பசியின் கொடுமையை மணிமேகலைக்கு உரைக்கும் தீவதிலகையின் கூற்றினைச் சீத்தலைச் சாத்தனார்,
      “குடிப் பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்
       பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்
       நாண்அணி களையும் மாணெழில் சிதைக்கும்
       பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
       பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்
       இசைச் சொல் அளவைக் கென்நா நிமிராது“3
என்று கூறுகிறார்.    
      “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
       உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“4
என உணவு கொடுத்தவர்களைச் சீத்தலைச்சாத்தனார் உயிர் கொடுத்தவர்களாக மனித நேயத்தோடு மதிக்கிறார்.  தீராப்பழி ஏற்றுச் சிறைச்சாலையிலே இருந்தபோதும் தன்னிலை குறித்துச் சிறிதும் வருந்தாமல் அமுதசுரபியிலிருந்து அமுதினை அள்ளி வழங்கி மணிமேகலை பசிப் பிணியை அகற்றுகிறார்.  அதேபோன்று அன்னை தெரசா கல்கத்தா நகரத்து வீதிகளிலே நடந்து திரிந்து பசியுடன் இருந்த குழந்தைகளை அள்ளித் தூக்கி அமுதூட்டினார்.  அன்னை தங்கியிருந்த மேரியன்னை மடத்தில் நின்று பார்த்தால் கல்கத்தாவில் உள்ள குடிசைப் பகுதிகள் தெளிவாகத் தெரியும்.  மணிமேகலையைப் போல் ஓடோடிச் சென்று அவர்களின் பசியகற்றினார்.  புண்களுக்கு மருந்திட்டார்.  வயோதிகம் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட முதியோரை அழைத்துச் சென்று காத்தார்.  “வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்“ என வருந்திய வள்ளலாரைப் போல அன்னை தெரசா மனிதர்களின் பசித்த வயிறுகளைக் கண்டு வாடினார்.
      “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்.  அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்“5 என்று திருமந்திரத்திலே திருமூலர் கூறுவதைப் போல, அன்னை தெரசா ஏழைகளுக்கு அன்பு செய்தலில் இறைவனைக் கண்டார்.  1942-43ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, உணவுத்தட்டுப்பாடு, இடநெருக்கடி, உள்நாட்டுக் கலகங்கள் இந்தியாவை ஆட்டிப்படைத்த காலகட்டத்தில் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்குத் தொண்டாற்றினார்.  லொரேட்டா சபையின் சட்டதிட்டப்படிச் செயல்பட வேண்டி இருந்ததால், மக்களின் பசிப்பிணி அகற்றித் தொண்டாற்ற அன்னை தெரசா பாப்பரசரிடம் அனுமதி கேட்டுக்கடிதம் எழுதினார்.
மருத்துவ சேவை
      கல்கத்தா மாநகரில் உள்ளோரைத் தன் சகோதர சகோதரிகளாகக் குழந்தைகளாக அன்னை தெரசா நினைத்தார்.  இராமகாதையிலே இராமரை வர்ணிக்கும் கம்பநாடர்,
     

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் குன்று சூழ்வான்
       மகனோடும் அறுவர் ஆனோம், எம் உழை அன்பின் வந்த
       அகன்அமர் காதல்ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
       புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை“6
எனும் பாடலின் பொருள்களுக்கு ஏற்ப, அன்னைக்கு யாவரும் உறவினர்தாம்.  மிஷனரி ஆஃப் சாரிட்டி“ எனும் அமைப்பை அன்னை உருவாக்கிய பின் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21இல் “மோத்திஜில்“ எனும் பகுதி சென்று மக்களைச் சந்தித்தார்.  அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே மாட்டுத் தொழுவத்தில் மாணிக்கமாய் வந்துதித்த இயேசுபிரானை நினைவுபடுத்துவது போல் மாட்டுத் தொழுவத்திற்கு அருகே பள்ளியைத் தொடங்கினார்.  பாரதி தெய்வத்திடம் கேட்ட வரத்தைப் போல்
      “பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
       கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
       மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
       விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்,
       யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
       இன்ப முற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
       செய்தல் வேண்டும், தேவ தேவா“7
என்று அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டினார்.  ஏழை மக்களுக்காகக் கையேந்தி நடந்தபோது வெற்றிலை வாயோடு தன் மீது காறி உமிழ்ந்த மனிதன் மீதும் அன்பு பாராட்டினார்.  தொழுநோயாளிகளைத் தொட்டு தூக்கினார்;  மருந்திட்டார்;  ஆதரவற்ற குழந்தைகளை இறைவனின் மக்கள் என்று கொண்டாடினார்.
      “மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார்,
       எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார். செவ்வி
       அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
       கருமமே கண் ஆயினார்“8
என்ற குமரகுருபரரின் வாக்கிற்கிணங்க அன்னை தெரசா இரவு பகல் பாராமல் ஏழைகளுக்காக உழைத்தார்.  நாற்பதுகளின் தொடக்கத்திலேயே புற்றுநோய், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான முறைகளை அன்னை கற்றறிருந்தார்.
ஈகையே மனிதநேயம்
      கடையெழு வள்ளல்களை நமக்குக் கற்றுத் தந்தமொழி உன்னதத் தமிழ்மொழி.
      “என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்று
       இவர்கள் எண்ணும் முன்னே
       பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
       போதாது போதாது என்றால்
       இன்னும் கொடுப்பான் இவையாவும் குறைவென்றால்
       எங்கள் கர்ணன்
       தன்னைக் கொடுப்பான், தன்உயிரும்தான்கொடுப்பான்“
என்று கர்ணனுக்குப் பாடிய கண்ணதாசனின் வரிகள் அன்னை தெரசாவுக்கும் பொருந்தும்.  போப்பாண்டவர் தமக்களித்த விலை உயர்ந்த மகிழ்வுந்தினை ஏலமிட்டு அப்பணத்தை ஏழைகளின் சிகிச்சைக்குத் தந்தவர் அன்னை.
மனித நேய அன்னை
      உலகின் பெரிய பரிசுகளான நோபல் பரிசு, பாரத ரத்னா பரிசு போன்ற எல்லாப் பரிசுகளையும் பெற்றிருந்தும் எளிமையையே அன்னை தெரசா கடைப்பிடித்தார்.  1997 மார்ச் 13இல் “மிஷனரி ஆஃப் சாரிட்டி“ அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அன்னை விலகினார்;  சாதாரணத் தொண்டரானார்; ஏழைகளை இறைவன் கொடுத்த வரமாகக் கருதியவர், காளிகட் முதியோர் இல்லத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.  செப்டம்பர் 5, 1997இல் ஆசிரியர் தினத்தன்று அனைவர் மனத்திலும் நீங்காமல் வாழ்பவர்; உடலால் மறைந்தார்.
முடிவுரை
      பிரபல இதழுக்கு அன்னை தெரசா தந்த பேட்டியின் இறுதி வரிகள் நேற்று என்பது என் கையை விட்டுப் போய்விட்டது.  நாளை என் கையில் வரும் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை.  இன்று என் கையில் இருக்கிறது.  இன்றைய தினம் என்னால் ஏழைகளுக்கும், நோயாளிக்கும் என்ன உதவி செய்ய முடியுமோ அதனைச் செய்துவிட வேண்டும்.  தாமதப்படுத்தக் கூடாது.  இதுதான் எனது திட்டம்என்று அமைந்தன.  இறைப் பணியாளராய், வணக்கத்திற்குரியவராய் தன் சேவையின் மூலம் மகிழ்ச்சி அடைந்த அன்னை தெரசா, இந்த நூற்றாண்டு விழாவில் புனிதராய் பாப்பரசரால் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே உலகத்தாரின் உயர் விருப்பமாய் அமைகிறது.  அன்னை தெரசா அகிலத்தின் வழிகாட்டி அல்லர்; மனிதநேயத்தின் வாழ்ந்து காட்டி
அடிக்குறிப்புகள்
1.   திருவிவிலியம், மத்தேயு, 16:26
2.       கண்ணதாசன், கண்ணதாசன் கவிதைகள், ப.7.
3.   மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, ப.218.
4.   மேலது, ப.219.
5.   திருமூலர், திருமந்திரம், ப.286.
6.   கம்பராமாயணம், பா.6507.
7.   பாரதியார், மகாகவி பாரதியார் கவிதைகள், ப.101.
8.   குமரகுருபரர், நீதிநெறி விளக்கம், பா.52.