Monday, November 4, 2013

வாரணம் ஆயிரம்..சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



இரண்டு மூன்று நாட்களாகவே யானை நினைவுகள் மனதின் ஓரத்தில் காலை ஆடிக்கொண்டிருக்கிறது.

பொட்டல்புதூர் யானையா?நெல்லையப்பர் கோவில் காந்திமதியா?சங்கரன்கோவில் குட்டியானை கோமதியா? தெரியவில்லை.

அதிகாலை நேரம் வாரிச்சுருட்டி எழுகிறேன்.

நீண்ட துதிக்கையுடன் பிரம்மாண்ட கருநிற அதிசயம்.

ஆட்டோ மட்டுமே நுழையும் எங்கள் குறுகியத்தெருவுக்குள் உடம்பைக்குறுக்கியபடி சிரமத்தோடு நுழைகிறது.
 

ஒவ்வொருவீட்டு வாசலிலும் துதிக்கையால் துளாவுகிறது.சில வீடுகளில் வாழைப்பழ வரவேற்பு,சில வீடுகளில் அரிசிவெல்லம் தந்து வரவேற்பு.

நன்கு முற்றிய கொப்பரைத்தேங்காயின் மூறிபோல் வெண்கலத்தில் செய்யப்பட்ட மணிகளின் ஓசை காதுகளில் வழிகிறது.

கத்திக்கூப்பாடு போடும் குழந்தைகளைத் தன்மீது அமரவைத்து அமைதியாக்குகிறது.சீர்தட்டிய குழந்தைகளைத் துதிக்கையில் வாளிநீரை வாரிமுகத்தில்வீசி முகத்தைத் தெளிவாக்குகிறது.


மெத்தனமாக யானை நடந்துசெல்வதைப் பார்க்க அந்தோனியார் பள்ளி விட்டவுடன் சமாதானபுரம் வரை உடன் நடந்துசென்றது இன்னும் நினைவில்இருக்கிறது. 


சமாதானபுரத்திலிருந்து பாளை.மார்க்கெட்டுக்கு, முக்குத்திரும்புமிடத்தில் மூங்கில்தட்டி செய்யும்இடத்தில் பெரிய மரத்தடியில் யானையோடு பலமணிநேரம் கழித்ததும் பள்ளிக்குப்போனவன் வீடுதிரும்பாததால் ஊர் முழுக்கத்தேடி கடைசியில் இரவு வீடு திரும்பும்போது வீடே ரணகளமாயிருந்ததும் இன்றும் பசுமரத்தாணிதான்.


யானை கிளம்பிவிட்டால் உடன் மாட்டுவண்டியும் வண்டி நிறைய தென்னங்கீற்றும் செல்வதைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்த நாட்களவை.

மாவுத்தன் யானைமொழியில்  ஏதோ ஒரு ஆணையைச் சொல்ல அந்த யானையும் அவன் சொன்னபடி ஆடுவது இன்னும் ஆவலைத்தூண்டும்.


குருசாமிஅய்யா யானையின் வெவ்வேறு பெயர்களை வகுப்பில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது.. . யானை,  வேழம், களிறு, பிடி, கலபம்,  மாதங்கம்,  கைமா,உம்பல், வாரணம், அஞ்சனாவதி, அத்தி,  அத்தினி, அரசுவா,  அல்லியன்,  அனுபமை, ஆம்பல்,  ஆனை,  இபம், இரதி, குஞ்சரம், இருள்,  தும்பு,  வல் விலங்கு, கரி,என்று அய்யா வரிசையாய் சொன்ன பேர்கள் மனம் பதிவு செய்துவைத்திருக்கிறது.
 


விலங்குகளிலேயே அதிக மதிநுட்பம் வாய்ந்தது யானைதான்.

திரும்பமுடியாத குறுகலான தெருகளில்கூட உட்சென்று பின்னோக்கிநடந்து வெளியே வரும் யானையின் ஆற்றலை எங்கள் தெருவில் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

செண்பகத்தக்கா தந்த வாளித்தண்ணீரை லாவகமாகத் துதிக்கையால் உறுஞ்சி சீர்தட்டிய அக்காவின் ஒருவயது பிச்சுக்குட்டி முகத்தில் சல்லென்று அந்த ஆம்பல் அதிசயம் வீசியதும் அதிர்ச்சியில் அவன் விக்கித்துப்போனதும் மறக்கஇயலா நினைவலைகள்.


யானை லத்தியை மிதித்தால் காலில் முள்குத்தாதென்று கிச்சாதாத்தா சொன்னதும்,நானும் எங்கள் பிச்சைஓதுவார் காம்பவுன்ட் பாலாவும் யானை லத்தியை மிதிமிதியென்று மிதித்து நெருஞ்சி முள்ளில் பாதம்பதித்து பதமானதும் சந்திக்கும்போது சொல்லிமகிழும் விடயங்கள்.


ஆனித்திருவிழா பார்க்கப்போய் சாரிப்பாட்டியோடு, அம்மன்சந்நிதி ஆறுமுகநயினார் சந்நிதியைத் தரிசித்து நின்றசீர்நெடுமாறன் கலையரங்கில் இளம்பிறைமணிமாறன் அம்மாவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தபோது நெல்லையப்பர்கோவில் யானை காந்திமதிக்கு வார்ப்பில் சோறு சமைத்து பெரியபெரிய கவளமாய் மாவுத்தன் உருட்டிஉள்ளே வைக்க ரசனையோடு காந்திமதி அதைச் சாப்பிட்டதும் அந்த இரவு நேரத்தை மேலும் செறிவாக்கியது.


யானை எப்போதும் இப்போதும் நகரும் அதிசயம்தான்.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
.




No comments: