Tuesday, October 15, 2013

ஆறுமுகம் என்கிற சாதனையாளர்


சில கணங்களின் அதிர்ச்சி நம்மைத் திக்குமுக்காட வைத்துவிடும்.
திட்டமிடாத அந்த நாளில் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது.
நவராத்திரி கொலு நாளின் எட்டாவது நாளில் பின்மாலைப்பொழுதில் அனைவரும் ஒருகணம் திகைத்துப்போனோம்.
குழந்தைகள் அணிஅணியாய் கொலுபார்த்துக்கொண்டிருந்த அந்த வினாடியில் கால்வரை நீள்முடி,தலையில் படமெடுத்த நாகத்தோடு அமைந்த அழகான கிரீடம் கையில் சூலத்தோடு,நீளமாய் தொங்கவிட்ட நாக்கொடு விடுவிடுவென மூன்று காளிகள் வீட்டுக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்?
அனைவரும் ஒருகணம் திகைத்து நின்றோம்.நடுநாயகமாய் நின்ற மாகாளி ஆறு விரலைக் காட்டினாள்.
அப்புறம்தான் புரிந்தது காளியாய் வந்திருப்பது நம் தென்பத்துக் கலைஞன் ஆறுமுகம்.
பூத்தொடுக்க யாருமற்று வாசமலராய் வந்தவன் ஆறுமுகம் எனும் அற்புதக் கலைஞானி.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நம் கல்லூரியில் வரலாற்றுத் துறை மாணவனாய் வந்த கலைஞன் ஆறுமுகம்.
கிராமத்து மாணவன் என்கிற தாழ்வுமனப்பான்மை ஒருபுறம்,இவ்வளவு பெரிய கல்லூரியில் எப்படிப் படிக்கப்போகிறோம் என்ற திகைப்பு மறுபுறம் யாரிடமும் பேசாமலும் அமைதியாய் இருப்பான்.
பல நேரங்களில் மாணவனின் பெயர்கூடத் தெரியாத நிலையை நாமே ஏற்படுத்துகிறோம்.
அன்பு செலுத்து அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி என்பதுதான் நான் வகுத்துக்கொண்ட ஆசிரிய நெறி.
தினமும் ஐந்துநிமிடம் மாணவர்களைப் பேச வைத்து அவர்களின் திறமையை வெளியே கொண்டுவரும் பணியினை நாம் தொடர்ந்து மேற்கொள்கிறோம்.
அப்படி வகுப்பறையில் அடையாளம் காணப்பட்டவன் ஆறுமுகம்.
நம் கல்லூரி இளைஞர் நலத்துறையின் வெளிச்சமான வெளியீடு என்ற அளவுக்கு மாறுவேடக்கலைஞனாக,நாடகக்கலைஞனாக, நாட்டுப்புறப் பாடல்கலைஞனாக கரகாட்டக்கலைஞனாக,அவன் எடுத்த முகங்கள் பல.
ஆறுமுகம் நம் கல்லூரியில் பயின்ற ஆறுஆண்டுகளும் பல நூறுபரிசுகளை வென்ற கலைஞனாகத் திகழ்ந்தான்.
தலையில் அவன் கரகம் வைத்துச் சுழன்று ஆடினால் பார்வையாளர் பக்கம் கரவொலி அதிரும்.
சன் தொலைக்காட்சியில் ராமலிங்கம் பலமுறை ஆறுமுகத்தைப் பேட்டி எடுத்துப்போட்டிருக்கிறார்.
சூரியன் பண்பலைநிகழ்வுகளில் திரு.சங்கர் பலமுறை வாய்ப்புத் தந்திருக்கிறார்.
ஹலோ பண்பலை அடுத்தவாரம் சங்கீதசபாவில் அந்த வாய்ப்பினை வழங்குகிறது.
ஒழுக்கம்,இனிமை,தொழில்பக்தி,கடும் உழைப்பு,குருபக்தி,எந்தப் பாத்திரம் தந்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடும் திறமை அனைத்தும் கலந்த கலவை ஆறுமுகம்.
தேசிய தர மதிப்பீட்டுக் கல்விக்குழு நம் கல்லூரிக்கு வருகைதந்தபோது ஆறுமுகம் அளித்த கலைநிகழ்ச்சி பெரும் பாராட்டப்பட்டது.
எங்கும் வேலைதேடிச் செல்லாமல் தென்பத்து கிராமத்தில் பால்பண்ணை வைத்து மாடுகளைப் பராமரித்து அவைகளுக்குத் தவறாமல் பிறந்தநாள் கொண்டாடும் தன்நம்பிக்கை மிக்க இளைஞர்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களிடம் விருது பெற்ற ஆறுமுகம் ஆயிரம் மேடைகள் காண வாழ்த்துகிறோம்.மாகாளியாய் மாகலைஞனாய் இன்னும் எங்கள் மனமேடையில்..

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



No comments: