Wednesday, October 16, 2013

பாரதி பயின்ற வகுப்பறை...





காகிதத்தை ஆயதமாக்கியவன்
 
வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவன்;

அன்பிற்சிறந்த தவமில்லை என வாழ்ந்தவன் 

;சின்னச்சாமி பெற்ற சினச்சாமி;

கோட்டுப் போட்ட கோபச்சூரியன் மாகவிஞன் சுப்ரமணியபாரதி படித்த வகுப்பறையில் நிகழ்ச்சி என்று ஆசிரியர் சொக்கு முந்தைய நாளே சொல்லியிருந்தார்.

திருநேல்வேலியில் எல்லாஅமைப்புகளிலும்,எல்லா இடங்களிலும் பேசிஇருக்கிறேன். 
 
பேச இல்லை..தரிசிக்க ஆசைப்பட்ட இடம் திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியார் பயின்ற ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளியின் பாரதியார் பயின்ற அந்தப் புனிதமான வகுப்பறையில் ஒரு மணிநேரம் அமர்ந்து அவன் அமர்ந்த இருக்கை,அவன் பாதம் பட்ட தளம்,அவன் உலவிய அந்த வகுப்பறை வராண்டா எல்லாவற்றையும் தரிசிக்க ஆசைப்பட்டது என் பேதை மனம்.

அதுவும் சீனி.விஸ்வநாதன் பெருமுயற்சியோடு தொகுத்த” கால வரிசையில் பாரதி பாடல்கள்” எனும் நூலைப் பாரதியின் கைஎழுத்தோடு பல முறை வாசித்து இரவுப் பொழுதுகளில் கண்ணீர் வடித்திருகிறேன்

.”.தேடிச்சோறு நிதம் தின்று..” எனும் பாரதியின் கவிதையை நான் வகுப்பில் சொல்லிச் சொல்லி என் மாணவச்செல்வங்கள் பலருக்கு அப்பாடல் மனப்பாடமாகத்தெரியும்.

என் ஞானஆசிரியன் பயின்ற வகுப்பறையில் மகாகவி பாரதியார் நினைவுநாளில் பேசப்போகிறேன் என்ற உணர்வு சொற்களால் வடிக்க முடியாது.அக்கினிக் குஞ்சு கவிதைக்கு ஒரு பொருளைமட்டும் யாரேனும் சொல்லமுடியுமா ?

 மகாத்மாவை திருவல்லிக்கேணிப் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கச் சென்று அவர் மறுத்த நிலையில் அதேநாளில் அதே நேரத்தில் அதேஇடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி “வாழ்க நீ எம்மான்” என்று பாடிய கம்பீரத்தைச் சொல்லவா?

 சிறுநூல்களால் இந்தியர்களுக்கு விடுதலை வேட்கையைத் தந்த ஆண்மையைச் சொல்லவா?

புதுச்சேரி சென்று மகான் அரவிந்தரோடும்,பாவேந்தர் பாரதிதாசனோடும்,கனகலிங்கத்தோடும் நட்புக் கொண்டு இறவாக் காவியங்களைப் படைத்ததிறத்தைச் சொல்லவா? 

“கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ?” என்று மாயவாதம் பேசிய திறன் சொல்லவோ?

 எதைச் சொல்ல ?சொற்கள் இயலாமையால் உள்வாங்கிக்கொண்டு பதுங்குவதாகத் தோன்றியது.
 

ஊரை இழந்து,தாய்மண்ணின் வேரை இழந்து அகதியாகத் தமிழன் ஓடும் நடப்பு நாளில் புதிய ஆத்திசூடியில் பாரதி “பூமிஇழந்திடேல்” என்று சொன்ன கம்பீரம் சொல்வதா?

 அந்த இளம்காலைப் பொழுது பாரதி எனும் பிரவாகத்தால் நிரம்பி வழிந்ததைப் போல்இருந்தது.

 ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் சொக்கு அண்ணனும்,பாலுவும்,கார்த்தியும் முன் செல்ல அந்த வகுப்பறை நோக்கி நடக்கிறேன்.
 
சாலக்குமாரசாமி கோவில் அருகே உள்ள வாசல் நேராக பாரதி பயின்ற வகுப்பறைக்குக் கொண்டுவிட்டது.

ஆசிரியர் நிற்கும் இடம் கீழே இருக்க,மாணவர்கள் இருக்கைகள் உயர்ந்து கொண்டே சென்றன.

தான் அஸ்திவாரமாக நின்று தனைச் சார்ந்தவர்களை உயர்தியவனாய் பாரதி அந்த அறையில் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தான்.

அறை முழுக்க மகாகவியின் ஓவியங்கள்,வைரவரிகள் என ஓவியர்வள்ளி செதுக்கிஇருந்தார்.

மாணவியர் மகாகவியின் வரிகளைப் பாடிக்கொண்டிருந்தனர்.

நான் மாணவனாகவும் பாரதி. என் ஞானஆசிரியனாகவும் மாறிவிடச் சொற்கள் கடந்த வெளியில் சுதந்திரமாய் பயணிக்கத் தொடங்கினேன்.

அந்த இளசை சுப்பிரமணியனுடன் மீண்டும்..








சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

3 comments:

Kasthuri Rengan said...

//ஒரு மணிநேரம் அமர்ந்து அவன் அமர்ந்த இருக்கை,அவன் பாதம் பட்ட தளம்,அவன் உலவிய அந்த வகுப்பறை வராண்டா எல்லாவற்றையும் தரிசிக்க ஆசைப்பட்டது என் பேதை மனம்.//

நீங்கள் பாகியவன்... அய்யா

B. HARIHARA KARTHIKEYAN, M.D.T. H.S. SCHOOL, TVL said...

THANK U

B. HARIHARA KARTHIKEYAN, M.D.T. H.S. SCHOOL, TVL said...

எங்களது பள்ளியின் பெருமைமிகு மாணவர் மகாகவி பாரதி பயின்ற வகுப்பறையினை பேணி காப்பது எங்களுக்கு கடமை